இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய கோரி, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனிநபர் தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், ராகுல் காந்திக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவையில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, எப்ஸ்டீன் கோப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்புபடுத்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "நாட்டையும், பாரத மாதாவையும் எப்ஸ்டீன் கோப்புகளுக்கு பயந்து பிரதமர் மோடி விற்றுவிட்டார்" என ராகுல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபாநாயகரை திட்டியதற்கு இதுதான் சாட்சி!! ஓம் பிர்லா அறையில் வாக்குவாதம்! வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்!

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். "முன் அறிவிப்பின்றி இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும்" என அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில், நிஷிகாந்த் துபேயின் தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டை அழிக்கும் நோக்கத்துடன் ராகுல் காந்திக்கு யார் நிதி அளிக்கிறார்கள்? வெளியாகாத புத்தகம் அவருக்கு எப்படி கிடைத்தது?" என கேள்வி எழுப்பினார். முன்னாள் ராணுவ தளபதி நரவானேயின் வெளியாகாத புத்தகம் புழக்கத்தில் வந்தது குறித்து தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ராகுலின் குற்றச்சாட்டுகள் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. காங்கிரஸ் தரப்பு இதை "அரசியல் பழிவாங்கல்" என விமர்சிக்கிறது. இந்த தீர்மானம் மக்களவையில் விவாதத்துக்கு வருமா என்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பு. பாஜக-காங்கிரஸ் இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்?! அள்ளிவீசிய ராகுல்காந்தி? லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!