விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று கோகுலேஷ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளின் என்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் இந்த பட்டாசு ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 4-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

பின்னர் விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!
இதனிடையே இந்த வெடி விபத்தில் முதற்கட்டமாக 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசு ஆலையின் போர்மேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்குசாமி (வயது 45), மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராராஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாழ்த்துகள் Dr. ஜென்சி! சாதித்து காட்டிய திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!