இஸ்ரேல் - காசா போர் மற்றும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதிய கட்டுரை தேசிய அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துகளுக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க., வெளியுறவு கொள்கையைக் கூட காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துவதாக கடுமையாக விமர்சித்துள்ளது.
தனியார் ஆங்கில நாளிதழில் வெளியான தனது கட்டுரையில் சோனியா காந்தி, காசாவில் பாலஸ்தீன குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது தார்மிக ரீதியாக ஏற்க முடியாதது என்றும், இந்தியாவின் பாரம்பரிய ராஜதந்திர நிலைப்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
இந்த கருத்துகளுக்கு பதிலளித்த பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். "காசா விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கும் காங்கிரஸ், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் வன்முறைகள் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

மேலும், இந்தியாவின் வெளியுறவு கொள்கை எந்த ஒரு தரப்பையும் மட்டும் ஆதரிக்கும் வகையில் இல்லாமல், அனைத்து நாடுகளுடனும் சமநிலையை பேணும் வகையில் செயல்படுகிறது என்று அவர் விளக்கமளித்தார். காசா விவகாரத்தில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் தனது நிலைப்பாட்டை பதிவு செய்ததோடு, மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதேபோல், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பினருடனும் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய நிலையை உருவாக்கியிருப்பதாகவும், ரஷ்யா - உக்ரைன், அமெரிக்கா - ஈரான் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளிலும் இந்தியா சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும் செஷாத் பூனாவாலா தெரிவித்தார்.
சோனியா காந்தியின் விமர்சனங்களும், அதற்கு பா.ஜ.க. அளித்த பதிலும் தேசிய அரசியல் மட்டுமல்லாமல், இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்த விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம்! பாஜக வியூகம்! ஊழல் புகரால் திணறும் ஆம் ஆத்மி!