IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ODI போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரைக் கைப்பற்றி இந்தியா சாதனைப்படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டியின் விவரங்கள்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது.
தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டி ஹாக் 106 ரன்களும், பவுமா 48 ரன்களும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசித் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!
இதையடுத்து 271 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஜோடி நிலைத்து நின்று அபாரமாக விளையாடியது.
111 பந்துகளில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால் (116* ரன்கள்), ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனக்கு இதுவே முதல் சதம் என்பதையும், சர்வதேச கிரிக்கெட்டில் இது 9வது சதம் என்பதையும் உறுதி செய்தார். விராட் கோலியும் நிலைத்து நின்று 65 ரன்கள் குவித்து அரை சதம் அடித்தார். இறுதியாக, இந்திய அணி 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 271 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 75 ரன்களை அடித்த ரோஹித் சர்மா, 27 ரன்களைக் கடந்தபோது சர்வதேசக் கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 14வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், அவர் சச்சின், கோலி, டிராவிட் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், 2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் இலக்குடன் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: இண்டிகோ நெருக்கடியால் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!