புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள கடும் இழுபறி காரணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 22) அவசர ஆலோசனை நடத்துகிறார். கூட்டணியைத் தொடரலாமா அல்லது தி.மு.க. தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும் போட்டியிட்டு, காங்கிரஸ் 2 இடங்களிலும் தி.மு.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது.
இந்த முறை காங்கிரஸ் 21 தொகுதிகள் கேட்கும் நிலையில், தி.மு.க. 15 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு கூடுதல் இடங்கள் தேவைப்படுவதற்கு காரணமாக உள்ளது.
இதையும் படிங்க: தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைவது போல, புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால் புதுச்சேரி காங்கிரஸ் தரப்போ “தமிழகத்துக்கு தி.மு.க., புதுச்சேரிக்கு காங்கிரஸ்” என்ற பழைய சூத்திரத்தை மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
நேற்று காலை முதல் புதுச்சேரியில் நட்சத்திர விடுதியில் தி.மு.க. மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோர் காங்கிரஸ் தரப்பினருக்காக காத்திருந்தனர். காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது கட்சி நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இரவு 10 மணி வரை 12 மணி நேரம் தி.மு.க. பக்கம் காத்திருந்தும் காங்கிரஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். புதுச்சேரியில் கூட்டணி தொடருமா? இல்லையா? என்பதை இன்றைய ஆலோசனையே தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 10க்கு 1 குறைஞ்சாலும் எங்களுக்கு வேண்டாம்! விலகிக்கிறோம்! திமுக கூட்டணியில் திடீர் போர்க்குரல்!! கலக்கத்தில் பிரேமலதா!!