சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் களத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை பலப்படுத்தும் வகையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் கருத்துக்கு காங்கிரஸ் உயர்மட்டம் பதில் அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சென்னை வந்திருந்தபோது, ஸ்டாலின் அவருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, “விஜய் ‘உண்மையான காங்கிரஸ் த.வெ.க. பக்கம் இருக்கிறது’ எனக் கூறி வருகிறார்.
இது காங்கிரஸ் ஓட்டுகளை பிரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். எனவே, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து, விஜய்யின் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டும்” என ஸ்டாலின் வலியுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: காரைக்குடி மக்களை ஏமாற்றிய விஜய்!! 6 மணி நேரம் காத்திருந்தும் பேசாமல் சென்றதால் ஏமாற்றம்!
சமீபத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் த.வெ.க.வுடன் கூட்டணி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பி.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.

இருப்பினும், விஜய் நெல்லையில் பேசியபோது, “பல கோடி ரூபாய் கொடுத்து ஸ்டாலின் காங்கிரசை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் த.வெ.க. பக்கம் நிற்கிறது” எனக் கூறியது தி.மு.க.வினரை கடுமையாக கோபப்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிவகுமார், “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. காங்கிரஸ் த.வெ.க.வுடன் இல்லை. தி.மு.க.வுடன்தான் இருக்கிறது. விஜய் சொல்வது தமிழ் மாநில காங்கிரஸாக இருக்கலாம்” என விமர்சித்தார்.
மறைமலை நகரில் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற சிவகுமார், “தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி. நேற்று முளைத்த காளான்களால் இந்த கூட்டணியைப் பிரிக்க முடியாது” என விஜய்யை மறைமுகமாக சாடினார்.
இருப்பினும், விஜய்யின் கருத்துக்கு ராகுல் காந்தியே நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என ஸ்டாலின் சிவகுமாரிடம் வலியுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!