அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கியதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயது நிர்ணய சோதனை (மருத்துவ பரிசோதனை) நடத்த உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உத்தரபிரதேச அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கோடிஸ்வர் சிங் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
முதலாவதாக, போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் வயதை நிர்ணயிக்க ஐகோர்ட்கள் மருத்துவ சோதனைக்கு உத்தரவிட முடியாது என்று தெளிவுபடுத்தினர். அதேசமயம், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த ஜாமினை ரத்து செய்தனர்.
இதையும் படிங்க: அருவருப்பா இல்லையா முதல்வர் ஸ்டாலின்? இது பொதுமக்களின் உயிர்!! அண்ணாமலை ஆவேசம்!
நீதிபதிகள் மேலும் கூறியதாவது: போக்சோ சட்டம் குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ஆனால் சில சமயங்களில் இந்த சட்டம், டீன் ஏஜ் காதலில் ஈடுபடும் இளைஞர்களை பழிவாங்குவதற்கும், குடும்ப கவுரவ பிரச்சினைகளுக்காக ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பெரிய சமூக அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று, ஒரே வயதுடைய அல்லது நெருக்கமான வயதுடைய இளைஞர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருக்கும்போது, அவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக கருதாமல் இருக்க, சட்டத்தில் "ரோமியோ-ஜூலியட்" (Romeo-Juliet) என்ற பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும், போக்சோ வழக்குகளில் வயது நிர்ணயத்திற்கு மருத்துவ சோதனையை விட பள்ளி சான்றிதழ்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினர். பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை வடிகட்டும் முதல் கட்ட காவலர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இந்த தீர்ப்பின் நகலை மத்திய சட்டத்துறைச் செயலருக்கு அனுப்பி, சட்டத்தில் தேவையான திருத்தங்களை பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தற்போதைய போக்சோ சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவருடன் எந்த விருப்பத்துடனும் உறவில் இருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதனால் காதலித்து ஓடிப்போகும் பல இளைஞர்கள் ஆயுள் தண்டனை வரை பெறும் நிலை உள்ளது.
இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் வாடும் பல பதின்ம வயது காதலர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. சட்டத்தில் தேவையான மாற்றங்கள் விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கைரேகை பதியலயா.. அப்போ கண் கருவிழி ஸ்கேன்..!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!!