கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தைவான் தீவு, சீனாவுடன் நீண்டகாலமாக அரசியல் மோதலில் உள்ளது. தைவான் தனி நாடு என்று கூறிக்கொள்ளும் நிலையில், அதை தனது பிரிக்க முடியாத பகுதி என்று சீனா உறுதியாகக் கூறி வருகிறது. இந்த மோதல் அவ்வப்போது இராணுவ ரீதியிலும் வெளிப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 19, 2025 அன்று காலை 6 மணி வரை தைவானைச் சுற்றி சீனாவின் 7 இராணுவ விமானங்களும், 11 கடற்படைக் கப்பல்களும் ரோந்து வந்ததை தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் செயல்பாடுகளை தைவானின் ஆயுதப்படைகள் தீவிரமாகக் கண்காணித்து, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இன்று காலை 6 மணி (UTC+8) வரை சீன மக்கள் விடுதலைப்படை (PLA) விமானங்கள் 7 மற்றும் கடற்படைக் கப்பல்கள் 11 தைவானைச் சுற்றி இயங்கியதை கண்டறிந்தோம். எங்கள் ஆயுதப்படைகள் நிலைமையைக் கண்காணித்து, பதிலடி கொடுத்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: காந்தி பேரை நீக்குனோமா? பொய் பிரசாரம் பண்ணாதீங்க! பாஜக பதிலடி!
சீனாவின் இத்தகைய தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளன. தைவான் தரப்பில் இது சீனாவின் “சாம்பல் மண்டல” (grey zone) தந்திரோபாயமாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் தைவானின் படைகளை தளர்த்தவும், உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவும் சீனா முயல்கிறது என்று கூறப்படுகிறது.
சீனா – தைவான் இடையிலான இத்தகைய பதட்டங்கள் அவ்வப்போது உச்சத்தை அடைவது வழக்கம். சர்வதேச அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: டிக்..டிக்..டிக்... தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை.. பதற்றம்...!