தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியால் ஈரான் மீது தொடங்கப்பட்ட போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதிப்படைந்து, எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி பெரிதும் தடைபட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் வீட்டு சமையல் காஸ் விநியோகம் தொடர்பான கவலைகளை அரசு தணித்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ சிலிண்டர்களையும், உணவகங்கள் உள்ளிட்ட வணிக துறைக்கு 19 கிலோ சிலிண்டர்களையும் வழங்கி வருகின்றன.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! பாதாளத்தில் பாஸ்மதி ஏற்றுமதி!! ஏற்ற, இறக்கத்தில் அரிசி விலை!
ஆனால் போர் பதற்றத்தால் இறக்குமதி பாதிக்கப்பட்டதால், வணிக சிலிண்டர் விநியோகம் நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டர் விநியோகமும் தாமதமாகி, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பதுக்கலைத் தடுக்க முன்பதிவு இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், "தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு போதுமான கையிருப்பு உள்ளது. தடையின்றி விநியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளது. மேலும், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ஹோட்டல்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், "வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகள், கல்லூரி விடுதிகள், ஐடி பூங்காக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது. பல ஹோட்டல்கள் மூடும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உறுதிமொழி மக்களுக்கு சற்று நம்பிக்கை அளித்தாலும், வணிக துறையின் நெருக்கடி தொடர்கிறது. எண்ணெய் விலை உயர்வு, கருப்புச் சந்தை விற்பனை ஆகியவை மக்களின் செலவை அதிகரித்துள்ளன. போர் நீடித்தால் சூழல் மேலும் மோசமடையும் அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஈரான் செய்யுறது ரொம்ப பெரிய துரோகம்! இப்பிடி பண்ணுவாங்கனு நினைக்கல! கத்தார் பிரதமர் காட்டம்!!