சென்னை: தமிழகத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் முறையான சோதனைகள் நடத்தப்படவில்லை என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த அலட்சியத்தின் விளைவாக, காஞ்சிபுரத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளும் இதேபோல் இறந்தனர்.
இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் இபிஎஸ்… அப்ப அதுக்கு ரெடியா? திருமா சரமாரி கேள்வி…!
இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுக்களை ஆய்வு செய்ததில், ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரா’ இருமல் மருந்துகள் உயிரிழப்புக்கு காரணம் என்பது உறுதியானது. இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் மருந்தை பரிந்துரைத்த மருத்துவரும், ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து கட்டுப்பாட்டாளரும் கைது செய்யப்பட்டனர்.
‘கோல்ட்ரிப்’ மருந்தை தயாரித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ உரிமையாளர் ரங்கநாதன், அக்டோபர் 9 அன்று மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சி.ஏ.ஜி.யின் 2024 ஆகஸ்ட் 1-ல் தமிழக அரசுக்கு அனுப்பிய செயல்திறன் தணிக்கை அறிக்கை, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் குறைபாடுகளை எடுத்துரைத்திருந்தது. 2016-17 முதல் 2020-21 வரையிலான காலத்தில், மருந்து ஆய்வாளர்கள் தங்கள் இலக்குகளை அடைய தவறியதாக அறிக்கை குறிப்பிட்டது.
உதாரணமாக, 2016-17-ல் 1,00,800 ஆய்வுகள் இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், 66,331 மட்டுமே முடிக்கப்பட்டன, இது 34% பற்றாக்குறையைக் காட்டுகிறது. இதேபோல், 2017-18 முதல் 2020-21 வரை 38-40% ஆய்வு பற்றாக்குறை நீடித்தது.
மருந்து மாதிரி சேகரிப்பிலும் 45-54% இடைவெளி இருந்தது. மேலும், மருந்து கட்டுப்பாட்டு துறையில் 32% பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கை, 2024 டிசம்பர் 10-ல் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், “மருந்து ஆய்வு தொடர்பான சி.ஏ.ஜி. எச்சரிக்கைகளை தமிழக அரசு ஆராய்ந்து செயல்பட்டிருந்தால், இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம், தமிழகத்தில் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தலையில் இடியை இறக்கிய அமித் ஷா!! அன்புமணி அதிரடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்!