தமிழகத்தில் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு அதிகரித்து வரும் மின் தேவை, காற்றாலை மின் உற்பத்தி குறைவு, புதிய புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்கம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
தமிழகத்தின் தினசரி சராசரி மின் தேவை சுமார் 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. கோடை காலத்தில் இந்த தேவை 20 ஆயிரம் மெகாவாட்டை தாண்டுவது வழக்கம். இந்த ஆண்டு வெப்பநிலை நீடித்து வருவதால், கடந்த ஜூலை 16-ம் தேதி மின் தேவை 21,724 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.
இதற்கிடையே காற்றாலை மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இல்லாததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மின்சாரத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினசரி சராசரியாக 10 கோடி யூனிட்டுக்கும் அதிகமாக கிடைத்த காற்றாலை மின்சாரம், சமீபத்தில் சுமார் 5 கோடி யூனிட்டாக குறைந்துள்ளதாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!
மேலும், வெளிச்சந்தையில் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.20-ஐ தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த விலையில் அதிக அளவு மின்சாரம் வாங்குவதில் மின்வாரியத்திற்கு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நேரங்களில் மின் தடை ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, தமிழக மின்வாரியம் 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மின் தொகுப்பு சீராக இருப்பதாகவும், விநியோக நிலைமையை உயரதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மற்றொரு முக்கிய விவகாரமாக, 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய கோரப்பட்டிருந்த டெண்டர் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025 மார்ச்சில் கோரப்பட்ட இந்த டெண்டரில் 50 நிறுவனங்கள் பங்கேற்றிருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றாலை மற்றும் சூரியசக்தி திட்டங்களுக்கு தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக மின்துறை சார்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர். மின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உற்பத்தி மற்றும் கொள்முதல் இடையிலான இடைவெளியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!