தமிழகத்தின் பாரம்பரியமும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைந்து ஒளிரும் அலங்கார ஊர்தி இந்த ஆண்டு டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற 77வது குடியரசு தின அணிவகுப்பில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. ‘வளமையின் மந்திரம்: சுயசார்பு இந்தியா’ என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட இந்த ஊர்தி, தமிழ்நாட்டின் மின் வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ள வளர்ச்சியை உலகிற்கு பறைசாற்றியது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், தமிழக ஊர்தியின் முன்பகுதியில் ஜல்லிக்கட்டு வீரரின் துணிச்சலும் திறமையும் பாரம்பரியத்தையும் குறிக்கும் வகையில் டெக்னோ-ஜல்லிக்கட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒளிரும் சுற்று வடிவங்களுடன் கூடிய காளை உருவம், பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் அழகிய குறியீடாக அமைந்தது.
ஊர்தியின் நடுப்பகுதியில் மாசற்ற போக்குவரத்துக்கான மேம்பட்ட மின் வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் சித்தரிக்கப்பட்டது. ரோபோடிக் கரங்கள் பேட்டரி அலகுகளை இணைப்பதை காட்டும் வடிவமைப்பு, துல்லியமான தொழில்துறை நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது. மின் வாகன சார்ஜிங் நிலையம், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தை தமிழ்நாடு உறுதியாக முன்னெடுப்பதை உணர்த்தியது.
இதையும் படிங்க: விண்வெளி நாயகனுக்கு வீரதீர விருது!! சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!
#WATCH | #RepublicDay2026 | Tamil Nadu’s tableau embodies the theme 'Mantra of Prosperity: Self-Reliant India,' presenting a seamless convergence of ancient cultural strength and contemporary technological leadership. It portrays the State as both a custodian of tradition and a… pic.twitter.com/GgSE4ZawY3
— ANI (@ANI) January 26, 2026
ஊர்தியின் பின்பகுதியில் பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து அழகிய காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியல் முறையையும், நவீன தொழில்நுட்பத்தையும் சமநிலைப்படுத்தும் மர வடிவமைப்பு, சூழலியல் மற்றும் தொழில்துறை இடையேயான இணக்கத்தை அழகாக வெளிப்படுத்தியது. அணிவகுப்பு குழுவில் கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 இளம் பெண்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களது நடனமும் ஆற்றலும் ஊர்திக்கு மேலும் உயிரோட்டம் சேர்த்தது.
தமிழக அரசின் இந்த அலங்கார ஊர்தி, மாநிலத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சிலம்பம், மயிலாட்டம் ஆகியவற்றை நவீன மின் வாகன தொழில்நுட்பத்துடன் இணைத்து காட்சிப்படுத்தியது. இது தமிழ்நாடு சுயசார்பு இந்தியாவின் முன்னோடியாக விளங்குவதை உலகிற்கு உணர்த்தியது. அணிவகுப்பு முழுவதும் தமிழக ஊர்தி பார்வையாளர்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றது.
இதையும் படிங்க: மீண்டும் அவமதிப்பு?! 2026 குடியரசு தினவிழா! 3ம் வரிசையில் ராகுல்காந்திக்கு இருக்கை!