தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. கடலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், டெல்டா மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மாநிலம் முழுவதும் 36 மணல் குவாரிகள் செயல்பட்டன. பின்னர் மணல் விற்பனையில் முறைகேடுகள், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவில் ஏற்பட்ட புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு மணல் குவாரிகள் மூடப்பட்டன.
தற்போது த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மீண்டும் மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 இடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரூ.100 கோடி!! பழநி முருகன் கோவில் நில விவகாரத்தில் அதிரடி... ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!
நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், மணல் குவாரிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல், நீர்வளத் துறையே நேரடியாக நிர்வகிக்கும் திட்டம் உள்ளது. மேலும், மணல் விற்பனை முழுமையாக ஆன்லைன் முறையில் மட்டுமே நடைபெறும். மணல் அள்ளும் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

ஒவ்வொரு குவாரியிலும் அதிகபட்சமாக 12 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி, எந்தவித புகாரும் எழாத வகையில் குவாரிகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து, குடிநீர் மற்றும் பாசனத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். எனவே, டெல்டா மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை! ஒரு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி சரிவு! அதிர்ச்சியில் வேளாண்துறை!