×
 

சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் இயக்க தயாராகியுள்ளது.

சென்னை மாநகரில் மின்சார பேருந்து சேவை வேகமாக வளர்ச்சி காண்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை, முதலில் வியாசர்பாடி பணிமனையிலிருந்து இயக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பெரும்பாக்கம் மற்றும் பூந்தமல்லி பணிமனைகளிலும் மின்சார பேருந்துகள் சாலைகளில் இறங்கின.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மொத்தம் 625 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதில் இதுவரை 380 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 225 குளிர்சாதன வசதியுடன் கூடிய (ஏ.சி.) பேருந்துகள் அடங்கும். மக்களிடையே இந்த மின்சார பேருந்துகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தினசரி சுமார் 2 லட்சம் பயணிகள் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக, பல்லவன் இல்லம் பணிமனையிலிருந்து 145 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை பணிமனையிலிருந்து மேலும் 100 மின்சார பேருந்துகள் சாலைகளில் இறக்கப்பட உள்ளன. மேலும், 100 கூடுதல் சொகுசு ஏ.சி. மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "சென்னையில் பறக்கும் ரயில் இனி மெட்ரோ வசம்!" மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

தற்போது சென்னையில் MTC சார்பில் சுமார் 3,000 ஏ.சி. வசதியற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதியாக 1,000 மின்சார ஏ.சி. பேருந்துகளை படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. மேலும், 20 ஏ.சி. டபுள் டெக்கர் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான டெண்டர் இறுதி நிலையில் உள்ளது. இவை வரும் ஏப்ரல் அல்லது ஜூன் மாதங்களில் சேவையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட மின்சார பேருந்து திட்டம் இந்த மாத இறுதிக்குள் முழுமையடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின் இரண்டாம் கட்டமாக மேலும் 600 மின்சார பேருந்துகள் கொண்டு வரப்பட உள்ளன. பயணிகள் இப்போது நெரிசலான பயணத்தைத் தவிர்த்து, வசதியாக அமர்ந்து, குளிர்சாதன வசதியுடன் பயணிக்க விரும்புகின்றனர்.

இதனால், எதிர்காலத்தில் ஏ.சி. மின்சார பேருந்துகளுக்கு மேலும் அதிக தேவை ஏற்படும் என MTC அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் சென்னையின் பொது போக்குவரத்தை மிகவும் நவீனமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும் முயற்சியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share