ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!
தமிழக மின்சார வாரிய தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை: தமிழக மின்சார வாரிய (டான்ஜெட்கோ) தலைமையகத்தில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவத்தில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளில் மின்வாரியத்தின் முக்கிய டெண்டர் ஆவணங்கள் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் நடைபெற்ற 397 கோடி ரூபாய் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 20-ம் தேதி, மின்வாரிய பொறியாளர் மலர்விழி இந்த திருட்டை முதலில் கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின்வாரியத்தின் உள் விசாரணையில், மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் (வார இறுதி நாட்களில்) ஊழியர்கள் குறைவாக இருந்த நேரத்தில் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வளர்புரத்தைச் சேர்ந்த 31 வயது கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபிநாத் மின்வாரிய தலைமையகத்துக்குள் நுழைந்து ஹார்டு டிஸ்க்குகளை திருடிய இடைத்தரகராகவும், முரளி மனோகர் அவற்றை வாங்கியவராகவும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கோபிநாத், திருடிய 34 ஹார்டு டிஸ்க்குகளை தனது வீட்டுக்கு கொண்டு சென்று பார்மட் செய்து, தரவுகளை முழுமையாக அழித்துவிட்டு பெங்களூருக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். ஒவ்வொரு ஹார்டு டிஸ்க்கும் சுமார் 20,000 ரூபாய் மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருட்டு சந்தையில் ஒவ்வொன்றும் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து 34 ஹார்டு டிஸ்க்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
போலீசார் மேலும் தெரிவித்ததாவது, “இந்த திருட்டுக்கு பின்னணியில் மின்வாரிய கொள்முதல் மற்றும் டெண்டர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு தமிழகத்தைத் தாண்டி விரிவடைந்துள்ளதால், சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது” என்றனர்.
கோபிநாத் எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். முரளி மனோகரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மின்வாரிய நிர்வாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: தினமும் 2 மணி நேரம் மின்தடை! சுழற்சி முறையில் பவர்கட்! சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் அவதி!