×
 

தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதற்கு..?? கேள்வியால் துளைத்தெடுத்த ஜோதிமணி எம்.பி..!!

தேர்தல் நேரத்தில் கூட்டப்பட்டிருக்கிற நாடாளுமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் மோடி அரசு அவசரமாக வரும் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அவசரமாகக் கூட்டுவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னரே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாதா?” என்று வினவியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை வரவழைப்பது, பாஜகவால் நேரடியாக மக்களைச் சந்தித்து வெற்றி பெற முடியாததால் கையாளப்படும் ‘குறுக்கு வழி’ என்று அவர் விமர்சித்தார்.

“நேர் வழியில் மக்களைச் சந்தித்து ஆதரவைப் பெற முடியாத பாஜக, இத்தகைய முறைகளைப் பயன்படுத்தி பிரசாரத்தை முடக்க முயல்வது அவமானகரமானது. மதிப்புமிக்க நாடாளுமன்றத்தை இத்தகைய அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் வரவேற்பதாகக் கூறிய ஜோதிமணி, “30 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய வரலாற்றைக் கொண்ட கட்சி காங்கிரஸ்.

இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

ஆனால், இந்த மசோதாவின் பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்கும் முயற்சியை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். தென் மாநிலங்கள் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில், அவற்றின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது, அந்த மாநிலங்களின் முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பறிப்பதாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒரு கட்சி தென் மாநிலங்களில் வெற்றி பெறாமலேயே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்பதால், தென் மாநிலங்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், ஒத்தகருத்து ஏற்பட்ட பின்னரே மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜோதிமணி கோரிக்கை விடுத்தார். மேலும், தேர்தல் காலத்தில் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share