என் பேரன் மன உளைச்சலில் இருக்கிறான்! விவாகரத்து வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுஜாதா உருக்கம்!
ரவி மோகனுக்கு என்ன மன உளைச்சல் என்று தெரியவில்லை என்றும், என் பேரக் குழந்தைகள் தான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்று சுஜாதா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஆர்த்தியின் தாயாரும் பிரபல தயாரிப்பாளருமான திருமதி. சுஜாதா விஜயகுமார் அவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆர்த்தி ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
ஜீவனாம்சம்: கடந்த 2025 ஏப்ரல் முதல் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் ரவி மோகன் வழங்கவில்லை என ஆர்த்தி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார், ஆர்த்தி ரவி தாக்கல் செய்துள்ள இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனச் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே ரவி மோகனின் தோழி கெனிஷா, ஆர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அவதூறு கருத்துகளை நீக்க வேண்டும் என்றும், இனிமேல் கருத்து வெளியிடக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், குடும்பச் சூழல் குறித்துப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டார். இன்று காலை நடந்தது மிகவும் துயரமான விஷயம். என் பேரன் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். தேர்வு நேரம் என்பதால் இந்த விவகாரங்களால் அவன் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறான் என வேதனை தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை வருடங்களாகத் தங்கள் மீது நிறைய அவதூறுகள் பரப்பப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், யார் யாரைப் பிளாக்மெயில் செய்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று கடந்த 2008-லேயே செய்திகள் வெளியாகிவிட்டன. நீதிமன்றத்தில் ஏற்கனவே பேசியதைத் தான் இன்றும் அவர் (ரவி மோகன்) பேசி வருகிறார் என்றார்.
நான் அழ மாட்டேன், ஏனென்றால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது குறித்து மேலும் விரிவாகப் பேச விரும்பவில்லை என்று கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.
திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவாகரத்து விவகாரத்தில், குழந்தைகளின் படிப்புச் செலவுக்கான இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இரு தரப்பிலும் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறார் பிரதமர்! நெல்லையில் கனிமொழி எம்பி விமர்சனம்!