திமுக-அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு..!! மதுரவாயல் பெஞ்சமின் திமுக பக்கம் திரும்புகிறாரா?
சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில், திமுகவின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இருவரும் திடீரென நேரில் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் இன்னும் அமைதியடையவில்லை. ஒருபுறம் கட்சிகளுக்குள் உட்கட்சி பதற்றம் நிலவ, மறுபுறம் எதிர்க்கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரபல ஹோட்டல் ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் திடீரென நேரில் சந்தித்து நீண்ட நேரம் தீவிர ஆலோசனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெஞ்சமின், இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவின் உட்கட்சி இயக்கங்கள் மற்றும் தலைமைத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சேகர்பாபு மற்றும் பெஞ்சமின் இருவரும் அடுத்தடுத்து அந்த ஹோட்டலுக்கு வந்து, தனியறையில் சுமார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டு இருவரும் தனித்தனியே வெளியேறினர்.
சென்னை மண்டலத்தில் மாற்றுக் கட்சி நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் முக்கியப் பொறுப்பை கையில் வைத்துள்ள சேகர்பாபு, வட சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்கும் உத்தியின் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், அடுத்த சில வாரங்களில் அதிமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு வரவேற்கும் திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தேர்தல் நாள் மோதல் எதிரொலி..! சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு..! போலீஸ் ஆக்ஷன்..!
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த பெஞ்சமின், சென்னை புறநகர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் கணிசமான செல்வாக்கு பெற்றவர். அவர் திமுகவில் இணைந்தால், அதிமுகவுக்கு சென்னைப் பகுதியில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பல முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்வது அதிமுக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்தச் சந்திப்பு வெறும் தனிப்பட்ட நட்பு ரீதியானது என்று கூற முடியாது என விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், “பெஞ்சமின் விரைவில் அறிவாலயம் நோக்கி நகரலாம்” என்ற பேச்சுகள் திமுக தொண்டர்கள் மத்தியில் சுறுசுறுப்பாக உலாவுகின்றன. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் இத்தகைய நகர்வுகள் எதிர்கால கூட்டணி அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இனி வாரம் 2 நாள் லீவு..!! வேலை நேரமும் மாற்றமாம்..!! குஷியில் அரசு ஊழியர்கள்..!!