×
 

விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு... ரூ.2.5 லட்சம் டு 50,000 வரை பரிசு... யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருத்திற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் 5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருத்திற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறுகுறு விவசாயி விருது:

2026–27ஆம் ஆண்டில், சிறுகுறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் "மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறுகுறு விவசாயி விருது" என்ற பெயரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்படும்.

சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட 10 பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முறையே ரூ.2,50,000, ரூ.1,50,000 மற்றும் ரூ.1,00,000 என, மொத்தம் 30 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க 50 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.

இதையும் படிங்க: உழவுக்கு ரூ.3000, உழவர்களுக்கு ரூ.4000... வேளாண் பட்ஜெட்டில் அடுத்தடுத்து அடி தூள் அறிவிப்புகள்...!

மாவட்ட அளவிலான வெற்றி விவசாயி விருது: 

நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும்.

முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக மொத்தம் 90 பரிசுகள், 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது: 

தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மையை பரவலாக்கும் நோக்கில், 2026–27ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை சிறப்பிக்கும் வகையில் "சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது" ஐந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பாராட்டுச் சான்றிதழுடன் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்விருதுகளை வழங்க 11 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டடங்கள்: 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்று பயனடையும் வகையில், திருவண்ணாமலை, காட்பாடி, குடியாத்தம் (வேலூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), நரிக்குடி (விருதுநகர்), போடிநாயக்கனூர் (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி) மற்றும் தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்) ஆகிய வட்டாரங்களில், 300 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குடன் எட்டு புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கான கட்டடங்கள் 27 கோடியே 82 லட்சம் ரூபாய் ஒன்றிய–மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும்.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.56.72 கோடி... 100% மானியத்துடன் புதிய வேளாண் திட்டம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share