"வறட்சி எங்கே?.. புகழ்ச்சி மட்டுமே!" டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லை என மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வறட்சி பற்றி பேசாமல் புகழ்ச்சி பாடிய வேளாண் பட்ஜெட் மற்றுமொரு பெயர் மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்துள்ள 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை முற்றிலும் பயனற்றதாக அமைந்திருப்பதாகத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாகக் சாடியுள்ளார்.
இது தொடர்பாகத் தமது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய அரசு வறட்சி மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அத்தியாவசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், முதலமைச்சரை உச்சி குளிரப் புகழ்வதற்கும் பாராட்டு மழை பொழிவதற்கும் மட்டுமே இந்த வேளாண் பட்ஜெட்டைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகக் சாடியுள்ளார்.
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற கட்சியின் லேபிளை ஒட்டினால் வேலை முடிந்துவிட்டது என இந்த அரசு நினைப்பதாகக் குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், இது வெறும் பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது என எள்ளல் செய்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு... ரூ.2.5 லட்சம் டு 50,000 வரை பரிசு... யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
குறுவை சாகுபடி பாதிப்பால் பெரும் நஷ்டத்தை அடைந்து, அரசின் நிவாரணம் மற்றும் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இது முற்றிலும் உழவர்களை ஏமாற்றும் வெற்று வரவு செலவுத் திட்டம் எனச் சாடினார்.
உழவர் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் உரத்த குரலில் எழுப்புவார்கள் என்றும், உறக்கத்தில் இருக்கும் அரசு உடனடியாக விழித்துக் கொண்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய பதிலையும் தீர்வையும் வழங்க வேண்டும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உழவுக்கு ரூ.3000, உழவர்களுக்கு ரூ.4000... வேளாண் பட்ஜெட்டில் அடுத்தடுத்து அடி தூள் அறிவிப்புகள்...!