அம்பத்தூரில் திடீர் ராட்சத பள்ளம்..! 20 ஆழத்துக்கு உள்ளே சென்ற சாலை… பொதுமக்கள் அச்சம்..!
சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் திடீரென இருபது அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் திடீரென ராட்சத பள்ளங்கள் உருவாவது தற்போது அடிக்கடி நிகழும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக 2025 மற்றும் 2026 ஆண்டுகளின் தொடக்கத்தில், மயிலாப்பூர், பெரம்பூர், திருவான்மியூர், OMR, Tidel Park அருகே உள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளன.
இவை வெறும் சாதாரண பள்ளங்கள் அல்ல. சில சமயங்களில் 5 அடி முதல் 10 அடி வரை ஆழமும், பல அடி நீளமும் கொண்ட பெரிய குழிகளாக உருவெடுத்து, போக்குவரத்தை முழுமையாக முடக்கி, வாகன ஓட்டுநர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கின்றன.
இதேபோல் 2025இல் Tidel Park அருகே ஒரு கால் டாக்ஸி உட்பட ஐந்து பேர் பயணித்த கார் பள்ளத்தில் விழுந்த சம்பவம், திருவான்மியூர் சிக்னல் ஜங்ஷனில் கார் முழுவதுமாக பள்ளத்தில் மூழ்கிய சம்பவம், பெரம்பூர் சாலையில் மீண்டும் மீண்டும் தோன்றிய பள்ளங்கள் ஆகியவை அனைத்தும் பழைய சாக்கடை குழாய் உடைவு அல்லது லீக்கேஜ் காரணமாகவே நிகழ்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.bஇந்த நிலையில் அம்பத்தூர் தொழில்பேட்டை அருகே பிரதான சாலையாக இருக்கும் மேனாம்பேடு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 77-ஆவது குடியரசு தின விழா: மெரினாவில் ஆளுநர் கொடியேற்றம்! 5 அடுக்கு பாதுகாப்புடன் 7,500 போலீசார் குவிப்பு!
சுமார் 20 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி ராட்சத பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் சென்னை மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. காரணம், பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் இவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: சி.பி.ஐ. விசாரணை நிறைவு: டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்டார் விஜய்!