மோடி பொங்கல் விழா! திருச்சியில் அமித்ஷா பங்கேற்பு!! பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு!
திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்
தமிழகத்தில் பாஜக சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோடி பொங்கல் விழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவருக்கு பரிவட்டம் கட்டி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய தமிழக உடையான வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வந்த அமித்ஷா, மேடையில் தோன்றிய போது மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
விழாவின் முக்கிய அம்சமாக 1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பாரம்பரிய இசையும் நடனங்களும் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். பொங்கல் பானைகள் கொதிக்கும் காட்சியும், பெண்களின் உற்சாகமும் விழாவுக்கு தனிச்சிறப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: ஆணவத்தின் உச்சியில் கொக்கரிக்கும் அமித் ஷா…! ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? செல்வப் பெருந்தகை கொந்தளிப்பு..!
நிகழ்ச்சிக்கு முன்னதாக அமித்ஷா திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோரும் இணை அமைச்சர் எல். முருகனும் உடனிருந்தனர். கோவில்களில் தரிசனத்தின் போது திரண்டிருந்த பக்தர்களுடன் அமித்ஷா கை குலுக்கி வாழ்த்துகளைப் பெற்றார். கோவில் வளாகத்தில் அவருக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்களின் வருகையையொட்டி திருச்சி நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பாஜகவின் இந்த பொங்கல் விழா தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் பெயரில் நடத்தப்படும் இத்தகைய நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.
தமிழக அரசியலில் பாஜகவின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமித்ஷாவின் இந்த தமிழகப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா... திருவானைக்காவல் கோயிலில் சாமி தரிசனம்...!