×
 

502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

502 செவிலியர் பணியிடங்களை அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 502 செவிலியர் பணியிடங்களை முழுமையாக ஒழித்துவிட்டு, அங்குப் பணியாற்றி வந்தவர்களை வேறு இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யும் தவெக அரசின் நடவடிக்கைக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ஆட்சிக்கு வரும் முன் காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தத் தவெக அரசு, தற்போது அதிகாரத்திற்கு வந்த பின்பு இருக்கும் காலிப் பணியிடங்களை ரத்து செய்து ஒழிப்பது மாபெரும் அநீதியாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை செவிலியர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலைமையைச் சமாளிக்கப் புதிய செவிலியர்களைப் பணியமர்த்துவதற்குப் பதிலாக, ஓரிடத்தில் உள்ளவர்களை மற்றொரு இடத்திற்கு மாற்றி அரசு ஏமாற்று வித்தை செய்வதாக அவர் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் தலா 30 செவிலியர் இடங்கள் வீதம் 210 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு, அவர்கள் சென்னை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்காகக் கடந்த ஜூலை 21 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை எண் 204 பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனநல மறுவாழ்வு அவசர சிகிச்சை மையங்களுக்குத் தேவைப்படும் 292 செவிலியர்களைப் புதிதாக நியமிக்காமல், அரசு மருத்துவமனைகளின் 100 இடங்களையும், பொது சுகாதாரத்துறையின் 192 இடங்களையும் ரத்து செய்துவிட்டு அங்கும் ஆட்களை மாற்றி அமைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் 2,334 ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 1,400-க்கும் குறைவான நிரந்தரச் செவிலியர்களே பணியாற்றுகின்றனர். தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி இருக்க வேண்டிய எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்களே பணிபுரியும் சூழலில், பணியிடங்களைக் குறைப்பது ஊரகப் பகுதி நோயாளிகளின் மருத்துவச் சேவையை முடக்கிவிடும்.

எனவே, சுகாதாரத்துறையைச் சீரழிக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 204-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், காலியாக உள்ள 6,500-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களைப் புதிய தேர்வுகளின் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


 

இதையும் படிங்க: "சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி  கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share