அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!
மூன்று நகராட்சிகளின் 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் முந்தைய ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைத் தடுக்கவும், அரசு நிதியை முறையாகப் பயன்படுத்தவும், டெண்டர் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, குறுகிய கால அவகாசத்தில் டெண்டர்கள் விடப்படுவது தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் நடைபாதை அமைப்பதற்கான ரூ.284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த டெண்டர்கள் பல்வேறு முறைகேடுகள் திட்டச் செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டது, சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக விதிகள் திருத்தப்பட்டது போன்றவை கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அடையாறு, பெசன்ட் நகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பணிகள் திட்டமிடப்பட்டிருந்தன. முதல்வர் விஜய் தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இந்த ஆய்வைத் தீவிரப்படுத்தியதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: Reels-க்கு Check... ஊழலுக்கு DOT... அமைச்சர்களுக்கு ஷாக் கொடுத்த முதல்வர் விஜய்..!
இதேபோன்று, மாநில அளவில் பல நகராட்சிகளிலும் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மூன்று நகராட்சிகளில் மொத்தம் 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கோட்டை நகராட்சியில் 2 டெண்டர்கள் மற்றும் உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள் அடங்கும். இந்த டெண்டர்கள் முந்தைய ஆட்சியில் அவசரமாக விடப்பட்டவை என்றும், அவற்றில் நிர்வாக ரீதியான குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் செயல்முறையை மறுபரிசீலனை செய்யும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
டெண்டர் சமர்ப்பிப்புக்கு குறுகிய அவகாசம் வழங்கப்பட்டதாக எழுந்த புகார்கள் இந்த ரத்து நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் சில மணி நேரங்களுக்குள் டெண்டர் முடிவு செய்ய வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள், ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக அமையும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் புகார் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அனைத்து டெண்டர்களையும் ஆன்லைன் மூலமாகவும், போதுமான அவகாசத்துடனும் மட்டுமே விட உத்தரவிட்டுள்ளது. குறுகிய கால டெண்டர்களைத் தவிர்க்கவும், நிர்வாக ரீதியான காரணங்களுக்காக ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நவோதயாவுக்கு NO..! தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சனை..? 3 வாரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!