×
 

எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி 'சீட்' கோரிக்கை!

2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை அண்ணாமலை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவில் உறுதியாக இருக்கும் அதே வேளையில், தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தேசிய தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகச் சென்னையில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் அவர் ஒரு முக்கியப் பட்டியலை வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முன்னதாக, அண்ணாமலை அவர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடிதம் கொடுத்தது குறித்துத் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை அண்ணாமலை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்குப் பதிலாகத் தனது தீவிர ஆதரவாளர்கள் 5 பேருக்குக் கண்டிப்பாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு பாஜகவுக்கு எனத் தனி நடைமுறை உள்ளதாகவும், அதனைத் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அவதூறு பேச்சு, அபாண்ட பழிதான் திமுகவுக்கு வாடிக்கை..! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

அண்ணாமலையின் இந்த நகர்வு கட்சிக்குள் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் பரிந்துரைத்துள்ள அந்த 5 பேர் யார்? அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் களம் காண்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக 5 தொகுதிகளைப் பெற்றுள்ள நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கான இடங்கள் எங்கே ஒதுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share