×
 

தி.மலையில் செல்போன்களுக்கு பாதுகாப்பு மையங்கள் ரெடி.! அண்ணாமலையார் கோவிலில் விறுவிறு நடவடிக்கை..!!

அண்ணாமலையார் கோவிலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆன்மிகத் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் இந்தக் கோயிலுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பௌர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கமாகும்.கோயிலின் புனிதத் தன்மை, பக்தர்களின் அமைதியான தரிசனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை அமலுக்கு வரவுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை மற்றும் உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதால் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், ரீல்ஸ் உருவாக்குதல் போன்ற செயல்கள் நடைபெறுவதால் பக்தர்களுக்கு இடையூறும், ஆன்மிகச் சூழலுக்குக் குந்தகமும் ஏற்படுவதாகக் கருதப்பட்டதே இதற்குக் காரணம்.இந்தத் தடைக்கு ஏற்ப, பக்தர்களின் வசதிக்காக மூன்று பிரதான கோபுர வாசல்களிலும் மொத்தம் ஐந்து செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கிழக்கு ராஜகோபுரம் அருகே இரண்டு மையங்களும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே இரண்டு மையங்களும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே ஒரு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உத்தரவு!

இந்த மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைத்து, ஒரு செல்போனுக்கு ரூபாய் ஐந்து கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.தரிசனம் முடிந்து வெளியே வரும்போது அந்த டோக்கனைக் காட்டி செல்போன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஏற்பாடு முழுமையாக தயார் நிலையில் உள்ளதால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் எந்தத் தடங்கலும் இன்றி செயல்படும். தடை உத்தரவை மீறி யாரேனும் மறைமுகமாக செல்போனை உள்ளே எடுத்துச் சென்றால் அது உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதையும் படிங்க: ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share