×
 

"பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!

மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தமிழகத்தைப் புறக்கணித்துள்ளதாகவும், இதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி ‘ரெய்டு’ பயத்தில் பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகவும் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையாகச் சாடியுள்ளார்.

அரசின் 2026-27 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் அதற்கு அதிமுக காட்டும் ஆதரவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பட்ஜெட் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இந்திய இளைஞர்களை வாட்டும் வேலையின்மைப் பிரச்சினை குறித்து எவ்வித ஆக்கப்பூர்வமானத் திட்டமும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 'வெண்ணெய்' தடவுவதும், அவர்கள் ஆளாத மாநிலங்களுக்குச் 'சுண்ணாம்பு' வைப்பதும் தான் இந்த பட்ஜெட்டின் சாராம்சமாக உள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்துவதாக அரசு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென்றால், அதற்குத் தகுந்தபடி ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், பட்ஜெட்டில் வெறும் 94 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.

இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

அதிமுக தற்போது வினோதமான ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு உரியப் பங்கை வழங்காத பட்ஜெட்டைப் பாராட்டி அறிக்கை வெளியிடும் எடப்பாடி பழனிசாமி, மறுபுறம் ஒரு கண்துடைப்புப் போராட்டத்தை நடத்துகிறார். தனது வீட்டிற்கு அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை 'ரெய்டு' வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவர் பாஜக-வை எதிர்க்கத் துணிவில்லாமல் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்.

தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்கக் கோரியும், ரயில்வே உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியும் நாளை (பிப். 12) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்" என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share