×
 

தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் உள்ளது! சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் மிக கண்டனம்!

தவெக ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் ஊசலாடுகிறது; 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற இந்தச் சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சராகத் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுப் பதின்மூன்றே நாட்கள் ஆகும் நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளார். திமுக எனும் தீயசக்திக்கு மாற்றான தூயசக்தி நாங்கள் தான் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது தூங்கும் சக்தியாக மாறியுள்ளது. முதல்வர் பதவியேற்ற இந்த 13 நாட்களில் மட்டும் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், ரவுடியிசம், வன்முறை என கிட்டத்தட்ட 30-க்கும் அதிகமான கொடூரக் குற்றங்கள் நடந்துள்ளதைத் தினசரி செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் மக்கள் எப்படி உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தார்களோ, அதே நிலைதான் தற்போதும் நீடிப்பதாக அவர் சாடியுள்ளார்.

புதிய அமைச்சரவையின் தகுதி குறித்தும், குற்றவாளிகளுக்கு எதிரான பயம் இல்லாத சூழல் குறித்தும் அவர் காரசாரமாக விமரிசித்துள்ளார். திருடன் கையில் சாவியைக் கொடுத்ததைப் போல, குற்றப் பின்னணி உடையவர்களை எல்லாம் கொண்டு போய் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் மாநிலத்தில் குற்றங்கள் எப்படி குறையும்? அரசைக் கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விடுத்து, முதலமைச்சர் விஜய் விதவிதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார். இது அவரது ஆளுமையின் அனுபவமற்ற தன்மையைத் தான் காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

புதிய அரசுக்குக் கால அவகாசம் தேவை என்ற வாதத்தை நிராகரித்த நயினார் நாகேந்திரன், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் துடிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அரசு அலுவல் மற்றும் கோப்புப் பணிகளைக் கற்றுக்கொள்வதற்குக் வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம். ஆனால், மக்களின் உயிர் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில், மிகத் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் எப்போதுதான் உணர்வார்? என்று தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: பக்கா ப்ளான்.. கனவோடு சாத்தூர் பயணம்.. தவிடுபொடியாக்கிய சசிகலா..!! விரக்தியின் உச்சத்தில் நயினார் நாகேந்திரன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share