"48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!
தவெக அரசின் மெத்தனப் போக்கால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. இனியும் காலம் தாழ்த்தினால், விவசாயிகளை திரட்டி பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கமடைந்து மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதற்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்திற்குள் பாதுகாப்பு சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றத் தவறிய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மெத்தனப் போக்கினால், விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் இன்று அழுகி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மின்வெட்டு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடுகளையும் தாண்டி, விவசாயிகள் ரத்தம் சிந்தி அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் அரசின் மெத்தனத்தால் இன்று மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. 'விவசாயிகளின் நண்பன்' என வேடம் போடும் தவெக அரசு, நெல்லைப் பாதுகாக்கத் திறனின்றி உழவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைத் தாமதமின்றி விதிமுறைப்படி 48 மணி நேரத்திற்குள் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையைப் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும்.மழையினால் ஏற்பட்டுள்ள பயிர் மற்றும் நெல் மூட்டை இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டம் நடத்துவதா? தவெகவை கிண்டல் செய்த ஆ.ராசா..!!
இனியும் காலம் தாழ்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடினால், பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து மழையில் நனைந்து சேதமடைந்து வரும் விவகாரம் தமிழக அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!