"விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் தவெக அரசின் கோட்டை ரீல்ஸ் விவகாரம் மற்றும் டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கோயம்புத்தூரில் இன்று பாஜக மையக்குழு கூட்டமும், நாளை நிர்வாகிகள் கூட்டமும் அவசரமாகக் கூடுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், தோல்விகளைத் தகர்த்தெறிந்து கட்சி மீண்டும் மிகுந்த உற்சாகத்துடன் விஸ்வரூபம் எடுக்கும். இந்தியாவில் 22-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக தான் கம்பீரமாக ஆட்சி செய்து வருகிறது. தமிழகத் தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டாலும், வந்துள்ள புதிய அரசிடம் மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
மத்திய அரசுடன் எப்போதும் மோதல் போக்கைக் கையாண்டதால்தான் முந்தைய திமுக அரசு மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆனைமேடு செப்புப் பட்டயங்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்காக முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும்; அதை விடுத்துப் பாரபட்சமான மனநிலையை அவர் கைவிட வேண்டும். அதேபோல், மத்திய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) கல்வித் திட்டம் புதுச்சேரியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எடுத்த எடுப்பிலேயே புதிய கல்விக்கொள்கையை எதிர்க்காமல், மாணவர்களின் நலன் கருதி நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!
முக்கியமாக, நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அறையிலேயே விஐபி ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது மாபெரும் பாதுகாப்பு குளறுபடி, இது மிகவும் கண்டனத்திற்குரியது. முதல்வர் அறையின் மாண்பைக் கெடுக்கும் இதுபோன்ற விசித்திரச் சம்பவங்கள் இனி நடக்காமல் விஜய் கவனமாக இருக்க வேண்டும். அடுத்ததாக, 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறும் புதிய அரசிடம் அதற்கான முறையான புளூபிரின்ட் (Blueprint) திட்டம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
இன்றும் கூட நான்கு இடங்களில் கடைகளை மூடச் சொல்லி மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள். எந்தெந்த கடைகள் எப்போது மூடப்படும் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கும் பழைய மாமூல் அராஜகத்திற்குப் புதிய ஆட்சியில் இன்னும் விடிவே கிடைக்கவில்லை.
ஆட்சிக்கு வந்தால் ‘சிங்கப்பெண் படை’ அதிரடி காட்டும் என்றார்களே, அது என்ன ஆனது? தவறு செய்பவர்களை ஒழிப்பேன் என்று மேடையில் பேசிய முதல்வர் விஜய் வார்த்தையை அதிகாரிகள் யாரும் இன்னும் மதிப்பது போல் தெரியவில்லை. மாற்றத்தை வேண்டி வாக்களித்த மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் முன், கடந்த ஆட்சியின் தவறுகளைக் கணக்கெடுத்துப் புதிய அரசு உடனடியாகத் தீர்க்க வேண்டும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!