"வானத்தைப் போல மனம் படைத்தவர்" - விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடியார் புகழஞ்சலி!
விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசியலில் ஈடு இணையற்ற ஆளுமையாகத் திகழ்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ‘கேப்டன் ஆலயம்’ நினைவிடத்தில் 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்தச் சிறப்பு நிகழ்வில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு இணைந்து நினைவிடத்தில் மலர் தூவிப் புகழஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேப்டன் குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “‘வானத்தைப் போல’ விரிந்த மனம் படைத்து, ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற மகத்தான கோட்பாட்டோடு வாழ்ந்தவர் எனது அன்புச் சகோதரர், பத்ம பூஷண் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். கலைத்துறையிலும் சரி, பொதுவாழ்விலும் சரி அவர் நிகழ்த்திய சாதனைகள் ஒரு காலத்திலும் மறைந்துவிடாது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தமிழகத்தின் மாபெரும் தலைவர் கேப்டன்" - விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக தலைவர்கள் உருக்கம்!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடியார், விஜயகாந்த் அவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பையும், அவரது நேர்மையான அரசியல் பயணத்தையும் நினைவு கூர்ந்தார். 2011-ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து அம்மாவுடன் அவர் களம் கண்ட அந்தப் பொற்கால நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டார். இந்த குருபூஜை நிகழ்வில் அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். அரசியல் எல்லைகளைக் கடந்து, ஒரு சகோதரத்துவ உணர்வுடன் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு, கேப்டன் சம்பாதித்து வைத்துள்ள உண்மையான மக்கள் அன்பிற்குச் சான்றாக அமைந்தது.
இதையும் படிங்க: DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!