தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் இப்பவே தொடங்கிய பஸ் தட்டுப்பாடு! காத்திருக்கும் சிக்கல்!
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகைகள் வரவுள்ளதால், பயணிகள் நெரிசலை சமாளிக்க தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னை: பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க போதிய அளவில் தனியார் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதனால் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, நெரிசலில் சிக்கி அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களுடன் இணைந்து தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் நடைமுறை முன்பு பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை முதல் விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், தேனி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த முறையில் பஸ்கள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய தொடர் விடுமுறையில் தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!
இதன் காரணமாக கடந்த 12-ம் தேதி கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து, பலர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்ததாகவும், தாமதமாக வந்த பஸ்களில் அதிக நெரிசலுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகைகள் வரவுள்ளதால், பயணிகள் நெரிசலை சமாளிக்க தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறுகையில், கடந்த காலங்களில் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவை ஏற்படும்போது தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், ஒரு கிலோமீட்டருக்கு ரூ.52.40 என்ற கட்டண அடிப்படையில் சேவை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால், இதுவரை சுமார் 17 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நெருங்கும் நிலையில் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பண்டிகை கால பஸ் சேவையை அரசு எவ்வாறு அதிகரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆயுத பூஜை, தீபாவளிக்கு டிக்கெட் விலை எகிறுமா? ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு அதிரடி செக்!