மாடுகளுக்கும் மைக்ரோ சிப்... மார்ச் 18 வரைக்கும் தான் டைம்..! கெடு விதித்த சென்னை மாநகராட்சி...!
சென்னையில் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சமீபத்தில் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவதை கட்டாயமாக்கும் முடிவை எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாகவும், சிலருக்கு வரவேற்கத்தக்கதாகவும் இருக்கிறது. சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் கால்நடைகளான மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதற்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இதன் பின்னணியில் சென்னை நகரில் தெருவில் திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்சினைகள் முக்கிய காரணமாக இருக்கின்றன. போக்குவரத்து குறுக்கீடு, விபத்துகள், சாலையோர சுத்தம், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்படும் இடையூறு ஆகியவை இதில் அடங்கும். பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை தொடர்ந்து வருவதால், மாநகராட்சி இப்போது தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. மைக்ரோ சிப் மூலம் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்துவமான அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதை ஸ்கேன் செய்து உரிமையாளரை எளிதில் கண்டறிய முடியும்.
இதனால் தெருவில் திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது, அபராதம் விதிப்பது போன்றவை எளிதாகிவிடும். ஏற்கனவே 2024-ஆம் ஆண்டிலேயே மாநகராட்சி தெரு மாடுகளுக்கு மைக்ரோ சிப் மற்றும் ஜியோ-ஃபென்சிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கண்காணிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் இப்போது அதை மேலும் விரிவுபடுத்தி, உரிமையாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கும் கட்டாயமாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை மக்களே..!! பொது இடத்தில் இதை செய்தால் ரூ.1 லட்சம் அபராதமாம்..!! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!
இதன் மூலம் மாடுகளை சரியாகப் பராமரிக்காதவர்கள், அவற்றை தெருவில் விட்டுவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். சென்னையில் மாடுகளை வைத்திருப்போர் அவற்றிற்கு மைக்ரோசிப் பொறுத்தி, உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.100 கட்டணம் செலுத்தி மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18ம் தேதிக்குள் மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: “விடிய விடிய போராட்டம்; குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!” - ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை!