×
 

தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 14 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலக வளாகத்திற்குள் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் காத்திருப்புப் போராட்டம் இன்று 14-ஆவது நாளாகத் தீவிரமடைந்துள்ளதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தங்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனப் பணியாளர்கள் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 14 நாட்களாக ஓயாமல் நீடித்து வரும் இந்தப் போராட்டக் களத்தில், பெண் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் அமைதி மற்றும் எதிர்ப்பின் அடையாளமாக வெள்ளை நிறப் புடவைகளை அணிந்து, கைகளில் துடைப்பங்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் கம்பிகளை ஏந்தியவாறு ஆவேச முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 

தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உரிய ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் மாதவிடாய் கால விடுப்புகளை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 முக்கிய அம்சங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களைப் பெருமைப்படுத்துவதாகக் கூறி 'தூய்மை தேவதைகள்' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் போராட்டக் களத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

எங்களுக்கு வெற்று வார்த்தைகளான 'தேவதை' பட்டம் எதுவும் தேவையில்லை; எங்களைச் சக மனிதர்களாக மதித்து எங்களது உழைப்புக்குரிய நியாயமான உரிமைகளை வழங்குங்கள். தொடர்ந்து 14 நாட்களாக வீதியில் இறங்கிப் போராடும் எங்கள் உழைக்கும் வர்க்கத்தின் அழுகுரல் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் கேட்கவில்லையா? எனத் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி வளாகத்தில் கொழுந்துவிட்டு எரியும் தூய்மைப் பணியாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மூத்த திரைப்பட நடிகை அம்பிகா தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் களத்திற்கு நேரில் வருகை தந்து தங்களது போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொழிலாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டுத் தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், மாநகரம் தழுவிய அளவில் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம் எனவும் தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: 8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share