சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
எழும்பூர் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக உழவன், ராக்போர்ட் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலத்திற்கு மாற்றப்பட்ட சேவை ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, எழும்பூரிலிருந்து இயக்கப்படும் மற்றும் எழும்பூருக்கு வந்து சேரும் முக்கிய விரைவு ரயில்களின் சேவை மாற்றம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த ரயில் சேவை மாற்றங்கள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போது இன்று முதல் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையில் இந்த நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களான சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16865), எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635), எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12653) மற்றும் எழும்பூர் - மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159) ஆகிய ரயில்கள் அனைத்தும் ஆகஸ்ட் 21 முதல் 25-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
இதையும் படிங்க: அடுத்த பிரதமர் விஜய்னா காங்கிரஸ் என்ன சொல்லுது? தூத்துக்குடியில் கனிமொழி எம்பி கேள்வி!
மறுமார்க்கமாக, தஞ்சாவூரிலிருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் (16866), கொல்லத்திலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), மங்களூருவிலிருந்து புறப்படும் விரைவு ரயில் (16160) மற்றும் சேலத்திலிருந்து புறப்படும் விரைவு ரயில் (22154) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 20 முதல் 24-ஆம் தேதி வரை எழும்பூருக்குச் செல்லாமல் தாம்பரம் ரயில் நிலையத்துடன் தங்களது சேவையை நிறைவு செய்யும். அதேபோல், திருச்சியிலிருந்து சென்னை வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654) மேற்கண்ட நாட்களில் எழும்பூருக்குப் பதிலாக மாம்பலம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழுக்கு முக்கியத்துவம் தாங்க! மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக வழக்கில் விரைவில் முக்கிய தீர்ப்பு!