இனி இந்தந்த விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்... சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு..!
சென்னையில் 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால், பலரும் தங்களது அவசரத்திற்காக சாலை விதிகளை மீறுகின்றனர். அவ்வாறு மீறுபவர்களுக்கு அவ்வப்போது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகன விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுதல் உட்பட பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். அதுவும் அபராத தொகையை பணமாக பெறாமல் பணமில்லா பரிவர்த்தனையாக ‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் மூலம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. மேலும் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகையை நீதிமன்றத்தில்தான் செலுத்த முடியும்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை கையில் சிக்கிய குடுமி..! 2 நாள் ரெய்டால் ஆட்டம் காணும் டாஸ்மாக் ஊழல்..!
இதனிடையே விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், விதிமீறல்களின் எண்ணிக்கையை குறைக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் ‘பாயிண்ட் சிஸ்டம்’ என்ற முறையை கொண்டு வந்தனர். அதாவது வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறை விதிமீறும்போது அவர்களுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரத்து செய்யப்படும்.
இந்நிலையில் போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்றுகொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதன்படி இனி சென்னையில் 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுமாம். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது 19வது முறை..! அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனை தீவிரம்..!