சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!
சென்னை அண்ணாசாலை ஜி.பி. (GP Road) சாலையில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
சென்னையின் மிக முக்கியமான வணிகப் பகுதியான அண்ணாசாலை ஜி.பி. (GP Road) சாலையில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. அண்ணாசாலை ஜி.பி. ரோடு பகுதியில் உள்ள கே.ஆர். காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தின் கீழ் தளம் மற்றும் முதல் தளத்தில் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தனியாருக்குச் சொந்தமான சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல் தளத்தில் உள்ள குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதும், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். தகவலறிந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், சுமார் 45 நிமிடங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ பரவாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்தப் பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர். அண்ணாசாலை மற்றும் ஜி.பி. ரோடு வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றப்பட்டது. தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்குப் பரவாமல் இருக்கத் தீயணைப்பு வீரர்கள் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. இருப்பினும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. விபத்திற்கான காரணம் குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் வெல்டிங் வேலைகள் நடைபெற்றபோது ஏற்பட்ட தீப்பொறியால் விபத்து நிகழ்ந்ததா அல்லது மின்கசிவு (Short Circuit) காரணமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!