மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மக்கள் இசைவைப் பெற்றுப் புதிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய சர்வதேச விமான நிலையம் மிகவும் இன்றியமையாதது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், எனினும் மக்களின் முழுமையான சம்மதத்தைப் பெற்று விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு இல்லாத மாற்று இடத்தில் புதிய விமான நிலையத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பின்னணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதார விளைநிலங்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது களத்திற்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அன்றைய திமுக அரசிடமும் முதலமைச்சரிடமும் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தினோம். விவசாய நிலங்களுக்குப் பதிலாக அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்தலாம் என்ற மக்களின் மாற்று ஆலோசனையையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!
தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஆளும் தவெக அரசு பரந்தூர் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். ரயில்வே, துறைமுகம் அல்லது விமான நிலையம் என எந்தவொரு பெரும் உள்கட்டமைப்புத் திட்டமாக இருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளின்படி மக்களின் கருத்துகளைக் கேட்டு அவர்களின் இசைவைப் பெறுவது ஜனநாயகக் கடமையாகும்.
தமிழகத்தின் எதிர்காலத் தேவைகளுக்குப் பெரிய அளவிலான புதிய விமான நிலையம் நிச்சயம் தேவை; ஆனால் அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காத வகையில், இயற்கை வளங்களைச் சிதைக்காத மாற்றுப் பகுதியில் மக்கள் ஆதரவோடு அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
பரந்தூர் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரத்து செய்யப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆளுங்கூட்டணியில் விசிகவும் ஓர் அங்கமாகப் பொறுப்பு வகிப்பதால், எதிர்க்கட்சிகளைப் போலப் பொதுவெளியில் நின்று எல்லாவற்றையும் விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது. எந்த விஷயத்தை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி உரிமைகளை நிலைநாட்டுவோம்.
ஒரு புதிய அரசு பொறுப்பேற்று முழு நிர்வாகக் கட்டமைப்பையும் சீரமைக்கக் குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் தேவைப்படும். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆகியுள்ள நிலையில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனக் குறை சொல்வது முறையாகாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!