×
 

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை!

தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது குறித்த இறுதிக்கட்ட ஆலோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடத்தினார். இந்த முக்கியக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையிலான பல்வேறு புதியத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' கீழ் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் உதவித்தொகையை உயர்த்துவது அல்லது கூடுதல் பயனாளிகளைத் திட்டத்தில் சேர்ப்பது குறித்த முக்கிய அறிவிப்பு இதில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் ஆண்டு என்பதால், தற்போதைய அரசு முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாமல், தேர்தலுக்குப் பிந்தைய சில மாதங்களுக்கான செலவினங்களுக்கு அனுமதி கோரும் 'வாக்களிப்பு கணக்கு' (Vote-on-Account) முறையிலான இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்கிறது. தேர்தல் முடிந்து மே மாதத்தில் பொறுப்பேற்கும் புதிய அரசே, 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 17-ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு, அதன் மீது சில நாட்கள் விவாதங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 20-ஆம் தேதி இதற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும். இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எனச் சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்துள்ளார். இது நடப்பு 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், அரசியல் ரீதியாகவும் இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தொழில்துறை, விவசாயம் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்தார்.

இதையும் படிங்க: தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்..!! அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்..!!

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share