மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி... முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
மிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், “வரும் தேர்தலில் வென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் மிகுந்த நம்பிக்கையுடன் உரையாற்றினார். இடைக்காலப் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், தனது அரசின் சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டு, ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் எமது அரசு செய்துள்ள சாதனைகள், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தரும். அமையப்போகும் ‘திராவிட மாடல் 2.0’ அரசாங்கம், தற்போதைய சாதனைகளையும் தாண்டிச் செயல்படும். நாங்கள் மீண்டும் வெல்வோம், மீண்டும் ஆட்சி அமைப்போம் என அவர் முழங்கினார். ஆட்சிக்கு வந்தபோது பல நிதி நெருக்கடிகளும், ஒன்றிய அரசின் ஒத்துழைப்பின்மையும் இருந்தன. இருப்பினும், சாக்குப்போக்குகளைக் கூறாமல், ‘விடியல் பயணம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, ‘காலை உணவுத் திட்டம்’ போன்ற மகத்தான திட்டங்களை மனசாட்சிப்படி நிறைவேற்றியுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
இந்த 5 ஆண்டு காலப் பயணத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் என்னோடு கைகோர்த்து நின்றது. நாளை விடியும் தமிழகம் எங்களை நம்பிக்கையுடன் வரவேற்கும் என நம்புகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாம்பியன்ஸ்.... 178 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி ஆணை முதலமைச்சர் பாராட்டு!
எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக வெளிநடப்பு செய்திருந்த நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு ஆளுங்கட்சித் தரப்பினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் களம் ‘ஆரிய - திராவிடப் போராக’ இருக்கும் என முதல்வர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய உரை தேர்தல் பரப்புரைக்கான தொடக்கப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!