மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!
மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகளுக்காக புதிய வாகன சேவைகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், பதவியேற்ற சில நாட்களிலேயே மக்கள் நலன் சார்ந்த ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் ரூ.2.90 கோடி மதிப்பிலான 40 புதிய வாகனங்களின் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள் முக்கியமாக சுகாதாரத் துறையின் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களுக்கு விரைவான மருத்துவ உதவி, அவசர ஊர்தி சேவைகள், சுகாதார அலுவலர்களின் இயக்கம் மற்றும் பிற ஊரக நலப்பணிகளை திறம்பட மேற்கொள்ள இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். ஊரக சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்திட்டம், கிராமப்புற மக்களின் அவசர மருத்துவத் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல வாகனங்கள் ஆம்புலன்ஸ் ஜீப் வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, முதல்வர் விஜய் தானே ஒரு புதிய வாகனத்தை ஓட்டிப் பார்த்து, அதன் செயல்பாட்டை நேரில் சோதித்தார். இந்தச் செயல் அவரது நடைமுறை அணுகுமுறையை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
பொதுமக்களின் அன்றாட வாழ்வில், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மருத்துவ அணுகல் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்தியது. வாகனங்களுக்கான சாவியை முதல்வர் விஜய் ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தார். புதிய வாகனங்கள் விரைவில் மாவட்ட அளவில் பணியில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "திராவிடப் பேரொளி"..! அயோத்திதாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை ..!