புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு.. 4 சர்வதேச நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தம்!
4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் நான்கு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு இணைந்து, உயர்மதிப்புடைய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி, மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 2,920-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் காலையில் நேரில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், தமிழ்நாட்டில் முதன்முறையாக தனது உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) சென்னையில் அமைக்கவுள்ளது. இதன் மூலம் சுமார் 220 உயர்தர ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (R&D Centre) சென்னையில் நிறுவ உள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகளால் மொத்தம் 1,220 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்.
உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia), இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைக்கவுள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். 1911-ல் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் ரூ.125 கோடி முதலீட்டில், 50,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் இந்த வளாகம், 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும்.
இதையும் படிங்க: “நான் இப்ப யாரு தெரியுமா?...” - மலேசிய தொழிலதிபரிடம் கோடிகளை சுருட்டிய தவெக எம்.எல்.ஏ... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்...!
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க் (MotiveLink), காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த முதலீடுகள், சென்னையை உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக மேலும் வலுப்படுத்தும். புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சி, அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல், திறன்மிக்க இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இவை அமைந்துள்ளன.
முதலமைச்சர் விஜய், இந்த முதலீடுகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் என்று தெரிவித்தார். மேலும், இந்த நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: "NO FLY ZONE" விதிகளை மீறிய CM விஜய்..? சட்ட நடவடிக்கை எடுக்கணும்... அதிமுக வலியுறுத்தல்..!!