பொணத்தைக் கூட விடமாட்டீங்களா?... கோவையில் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கொடூரம்...!
கோவையில் அதிர்ச்சி - புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி 3½ பவுன் நகை திருட்டு - இருதரப்பினர் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.
கோவையில் இறந்தவரின் உடலை தோண்டி நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ். இவரது தந்தை நாகராஜ் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது உடல் பீளமேடு பகுதியில் உள்ள சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தனது தந்தை உயிருடன் இருந்தபோது மிகுந்த விருப்பத்துடன் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை அவரது உடலிலேயே அணிவித்து வெங்கடேஷ் அடக்கம் செய்துள்ளார். இந்த விவரத்தை எப்படியோ முன்கூட்டியே அறிந்த மர்ம நபர்கள் சிலர், உடல் புதைக்கப்பட்ட சில நாட்களிலேயே மயானத்திற்குச் சென்று சடலத்தைத் தோண்டி அதிலிருந்த நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், 16-வது நாள் காரியம் முடித்து சடங்குகளைச் செய்வதற்காக வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றனர். அப்போது அந்த இடம் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நாகராஜின் மகன் வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த மயான ஊழியர் கார்த்திகேயன் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
கார்த்திகேயன் அளித்த தகவலின்படி, நாகராஜின் உறவினரான சக்திவேல் (35) மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் (46) ஆகியோர் ஜூன் 16 இரவு கல்லறையைத் தோண்டி, சங்கிலியைத் திருடிவிட்டு உடலை மீண்டும் புதைத்துள்ளனர். பின்னர் அந்த இருவர், மற்றொரு நபரின் உதவியோடு சங்கிலியை உருக்கி அடகு வைத்துள்ளனர்.
இந்த விபரத்தை அறிந்த குடும்பத்தினர் மணிகண்டனைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் சக்திவேல் தப்பியோடிவிட்டார்.
இதற்கிடையில், தன்னைத் தாக்கியதாக நாகராஜின் உறவினர்களான மணி, ரஞ்சித் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு எதிராக மணிகண்டன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மறுபுறம், தனது தந்தையின் சடலத்திலிருந்து நகையைத் திருடியதாக மணிகண்டன், சக்திவேல் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வெங்கடேஷ் ஒரு எதிர் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!
இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!