அதிகாலையிலேயே அதிரடி... கோவை முழுவதும் களமிறங்கியது காவலர்கள் படை... காரணம் என்ன?
கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு சோதனை: 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை
கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கிய இந்த சோதனையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் தனிப்படைகளாகப் பிரிந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சோதனையின் போது கணிசமான அளவில் கஞ்சா, மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொணத்தைக் கூட விடமாட்டீங்களா?... கோவையில் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கொடூரம்...!
மேலும், கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள இடங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் விரிவான சோதனை நடத்தப்பட்டது. பேருந்து மற்றும் ரயில் வழியாக போதைப்பொருட்கள் கோவை மாவட்டத்திற்குள் கடத்தப்பட்டு, பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு அளவு போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான முழுமையான விவரங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை இன்று மாலை காவல்துறை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கை, கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!