×
 

"தொழிலாளர் துரோக சட்டம்" திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் - முத்தரசன்  எச்சரிக்கை!

மத்திய அரசின் புதிய தொழிலாளர் துரோக சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) முன்னாள் மாநிலத் தலைவர் இரா. முத்தரசன் அவர்கள் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை "தொழிலாளர் துரோக சட்டம்" எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் ஆளுநர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கலவரச் சூழலை உருவாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நவம்பர் 21 முதல் அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து இன்று இடது சாரி இயக்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. 19 தொழிலாளர் சட்டங்களை முற்றிலும் அழித்துவிட்டு, 4 தொகுப்புகளாகப் புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சட்டம் தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது. 20 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் தொழிற்சாலை என்றிருந்ததை 40 ஆக மாற்றியுள்ளனர். சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுவதுடன், பணிக்கொடை நோக்கத்தையே இந்தச் சட்டம் சிதைத்துவிட்டது.

சுரங்கம், இரசாயனத் தொழிற்சாலைகளில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது என்றிருந்த நிலையில், புதிய சட்டம் அவர்களையும் ஈடுபடுத்தலாமெனக் கூறுகிறது. தொழிலாளர் நல நிதி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமான வாரியத்தின் நிதி முழுவதும் புதிய சட்டம் மூலம் ஒன்றிய அரசுக்கு மாற்றப்படுகிறது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கின்றன. ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைக் கொண்டு வந்து, தொழிலாளர்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இந்தத் தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்படும். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் போல, ஒரு போராட்டத்தை ஒன்றிய அரசு சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் முத்தரசன் எச்சரித்தார். தமிழகத்தில் பல முயற்சி எடுத்தும் பா.ஜ.கவால் கால் ஊன்ற முடியவில்லை. தி.மு.க. ஆட்சியை அகற்றத் தீவிரமாகவும் கவனமாகவும் இருக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில், ஜெ. தலைமையிலான அரசும், நீதிமன்றமும் நிராகரித்த ஒன்றை, இப்போது மீண்டும் சாமிநாதன் என்ற நீதிபதி மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். கலவரத்தைக் கொண்டு வர வேண்டும் என நீதிமன்றமும், ஆர்.எஸ்.எஸ். கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று முத்தரசன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இது தீபக்கல்லே கிடையாது, அளவு கல் என்றும், வழக்கமாகத் தீபம் ஏற்றும் இடத்தில்தான் ஏற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் நிலைப்பாடு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதே பிரச்சினை வந்தபோது, நீதிமன்றத்தின் மூலமாகத் தடுத்து நடவடிக்கை எடுத்தார். ஆனால், துரதிஷ்டவசமாக எடப்பாடி பழனிச்சாமி தற்போது பா.ஜ.க.வை ஆதரிக்கின்றார். தமிழக ஆளுநர் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கவும், கலவரச் சூழலை ஏற்படுத்தவும் முயல்கின்றார்.

கோவையில் அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆளுநர் கலந்துகொள்ளும் "சரஸ்வதி நாகரீகம்" கருத்தரங்கிற்கு மாநில அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மீறிக் கூட்டம் நடத்தப்பட்டால், அனைத்துக் கட்சிகள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். "நீதிபதியும், ஆர்.எஸ்.எஸ். கும்பலும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர் என நான் சொல்கின்றேன். சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்," என்று நீதிபதி சாமிநாதனைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.


 

இதையும் படிங்க: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! போலீஸ் தேடுவது தெரிந்தும் மோட்டார் அறையில்... கோவை பாலியல் வழக்கில் வெளிவரும் உண்மைகள்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share