×
 

தவெக நிகழ்ச்சிக்கு தெருவோரக் கடைகள் அப்புறப்படுத்துவதா?: சிபிஎம் ஜி.செல்வா கண்டனம்!

தவெகவின் தூய்மை துறைமுகம் நிகழ்வுக்காக என்.எஸ்.சி. போஸ் சாலை தெருவோரக் கடைகளை அப்புறப்படுத்த முயல்வதற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட என்.எஸ்.சி. போஸ் சாலையில் சட்டரீதியாக இயங்கி வரும் தெருவோர வியாபாரிகளை, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்வுக்காக அப்புறப்படுத்த முயற்சிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், துறைமுகம் பகுதி என்.எஸ்.சி. போஸ் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய தெருவோர வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்று, சென்னை மாநகராட்சிக்கு உரிய மாத வாடகையைச் செலுத்திப் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "தூய்மை துறைமுகம்" என்ற பெயரில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக, அப்பகுதியில் உள்ள தெருவோரக் கடைகளை உடனே அப்புறப்படுத்துமாறு அக்கட்சியின் நிர்வாகிகள் வியாபாரிகளைத் தீவிரமாக வற்புறுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பங்கேற்க உள்ளதால், கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

மேலும், "தூய்மை துறைமுகம்" நிகழ்வின் அழைப்பிதழில் தமிழ்நாட்டின் சௌகார்பேட்டை பகுதியை "லிட்டில் நார்த் இந்தியா" என வரையறுத்து, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அழைப்பிதழ் வெளியிட்டுத் தவெக நிகழ்ச்சி நடத்துவது எந்த வகையில் நியாயமாகும் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளில் முதல்வர் உடனே தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

இதையும் படிங்க: பாமகவை குறிவைத்த தவெக.. முந்திக்கொண்ட திருமாவளவன்! கூட்டணி அரசியல் பின்னணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share