“கட்சிக்கே ‘கால் சீட்’ கொடுக்கிற ஒரே தலைவர் விஜய் தான்” சிபிஎம் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!
கோவில்பட்டியில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மிகக் கடுமையாக விமரிசித்துப் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம், விஜய்யின் அரசியல் அணுகுமுறை ஒரு நாடகக் கம்பெனி போல இருப்பதாகக் கிண்டலடித்தார். விஜய் வரும் பிரச்சார வாகனத்தைப் பார்த்தால் எமன் ஏறும் எருமை மாடு போலத் தெரிகிறது. மக்கள் அவருக்கு விசில் ஊதுவதை விட்டுவிட்டு, அவர் வரும் வாகனத்திற்கு விசில் ஊதுகின்றனர்.
பொதுவாக நடிகர்கள் படத்திற்குத்தான் கால் சீட் கொடுப்பார்கள். ஆனால், தன்னுடைய கட்சிக்கே ‘கால் சீட்’ கொடுக்கிற ஒரே தலைவர் விஜய் தான். தான் ஆரம்பிக்கும் கட்சி ஒரு சதவீத வாக்குகளைக்கூடத் தாண்டாது என்பதை அவரே ஒப்புக்கொள்வது போலப் பேசுகிறார். கோட்டையைப் பிடிக்கப் போவதாகக் கூறிவிட்டு, இப்போது இத்துப்போன செங்கோட்டையனைப் பிடித்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்கள். விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்த மதுக்கூர் ராமலிங்கம், அவர் மத்திய அரசை விமர்சிக்கத் தயங்குவதாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “விஜய் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்!” அமைச்சர் மா. சுப்பிரமணியம் விமர்சனம்!
சேலம் கூட்டத்தில் ‘ஸ்டாலின் சார்’, ‘முதல்வர் சார்’ என்று மதிக்கத் தெரிந்த விஜய், தமிழகத்திற்கு எதிராக வஞ்சகம் செய்யும் மோடி தலைமையிலான மத்திய அரசைப் பற்றி ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை? எஸ்.ஐ.ஆர் (SIR) பற்றிப் பேசும் இவருக்கு பி.எம் (PM) பற்றிப் பேசத் துணிச்சல் இல்லையா? அல்லது எழுதித் தந்தவர் எழுதித் தரவில்லையா?” எனக் கேள்வி எழுப்பினார். பஞ்ச் டயலாக் பேசுவது அரசியல் அல்ல. உங்களுக்கு உங்கள் அரசியல் எதிரி (திமுக) தான் முக்கியமா? கொள்கை எதிரியான பாஜக முக்கியம் இல்லையா?” என்றும் அவர் சாடினார்.
விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த மதுக்கூர் ராமலிங்கம், “அரசியல் ரீதியாக அவரை விமர்சிக்கலாமே தவிர, சொந்த வாழ்க்கையைப் பேசக்கூடாது. அது சிபிஎம்-ன் பண்பாடு அல்ல” என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!