×
 

தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்குக் காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு நாளொன்றுக்கு 1.9 டிஎம்சி வீதம் மொத்தம் 28 டிஎம்சி தண்ணீர் கோரியிருந்த சூழலில், வெறும் 11.66 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துவிடப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது டெல்டா விவசாயிகளிடையே கலவையான எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 141-ஆவது ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகளும், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் நேரில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் தங்களது காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். 

கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்குக் காவிரியில் வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடகம் வஞ்சித்துள்ளதாகவும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தினங்கள் மட்டுமே முழுமையாகத் திறந்துவிட்டு மற்ற நாட்களில் மிகக் குறைந்த அளவே நீரைக் கசியவிட்டதாகவும் புள்ளிவிவரங்களுடன் குற்றம்சாட்டினர். எனவே, தற்போதைய குறுவை சாகுபடித் தேவையைக் கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு 1.9 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 28 டிஎம்சி நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: மெட்ரோவை மட்டும் பார்க்காதீங்க... மேட்டூரையும் பாருங்க! முதலமைச்சருக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!

இதற்குப் பதிலளித்துப் பேசிய கர்நாடக அரசு அதிகாரிகள், தங்களது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான தென்மேற்குப் பருவமழை பெய்யாத காரணத்தால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து பெருமளவில் சரிந்துள்ளதாகத் தெரிவித்தனர். 

தற்போதைய சூழலில் தமிழகம் கோரும் அளவிற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டால், தங்களது மாநிலத்தின் விவசாயத் தேவைகள் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களின் குடிநீர்த் தேவைகளுக்கே கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறி, அவ்வளவு நீரினைத் திறந்துவிட முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்தனர்.

இரு மாநில அதிகாரிகளின் காரசார வாதங்களையும் பதிவு செய்த ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா, நிலவரங்களை ஆய்வு செய்து இறுதிப் பரிந்துரையை வெளியிட்டார். அதன்படி, நாளை (ஆகஸ்ட் 25) முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்குக் காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார். 

இதன் மூலம் 15 நாட்களில் தமிழகத்திற்கு சுமார் 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் இந்த முக்கியப் பரிந்துரை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை கூடி விவாதித்து அதிகாரப்பூர்வ இறுதி உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share