மெட்ரோவை மட்டும் பார்க்காதீங்க... மேட்டூரையும் பாருங்க! முதலமைச்சருக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!
காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் பாதிப்பில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் இது இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை அல்ல என பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை நீர் மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை ஆய்வுகளைத் தாண்டி முதலமைச்சர் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு நேரில் சென்று காவிரி ஆற்றைப் பார்வையிட வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தின் பல்வேறு முக்கிய நிலவரங்கள் குறித்துத் தனது அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது காவிரி மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவே நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். குறுவை சாகுபடி முடிந்து தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. நாம் கர்நாடகாவை வஞ்சிக்க நினைக்கவில்லை; இரண்டு மாநில மக்களுக்கும் பாதிப்பில்லாமல் தண்ணீரைக் பகிர்ந்து அளிக்க வேண்டும். இது ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை அல்ல. வட மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், இந்தியாவில் உள்ள நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும் எனப் பிரதமருக்குக் கோரிக்கை வைக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பிரதமரை நேரில் சந்தித்து இதற்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கர்நாடக முதலமைச்சரின் வருகை குறித்துப் பேசிய அவர், நீதிமன்றங்களுக்குச் சென்றும் பலமுறை தீர்வு கிடைக்காததால் தான் முதலமைச்சர் கர்நாடகா சென்று பேச வேண்டும் எனக் கூறுகிறோம். அரசியல் தலைவர்கள் சுயநலத்திற்காகக் கோயில்களுக்குச் செல்லும்போது, தமிழ்நாட்டு மக்களுக்காக ஏன் கர்நாடகா செல்லக் கூடாது? கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்; அவருக்குத் தேவையான முழுப் பாதுகாப்பையும் நாங்கள் தருகிறோம். முதலமைச்சர் சென்னையில் மெட்ரோ இரயில் மற்றும் காவல்துறையின் அணிவகுப்புகளைப் பார்ப்பது போல, மக்கள் பிரச்சனைகளையும் நேரில் பார்க்க வேண்டும். ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்குச் சென்று காவிரி நிலவரத்தைப் பார்வையிட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!
மேலும் மின்சாரப் பிரச்சனை குறித்துச் சாடிய அவர், முன்னர் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு கடுமையாக அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே மின்வெட்டைக் கண்டித்து மக்கள் வீதிக்கு வந்து போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற்று, மின்வெட்டைச் சரிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மட்டுமல்லாமல், நீர் மிகை மாநிலமாகவும் முதலமைச்சர் மாற்ற வேண்டும். அத்துடன் தர்மபுரி மாவட்டச் செய்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் செய்தித்துறை சந்திப்புகளைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதைச் சட்டமன்றத்தில் வலியுறுத்துவேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவுக்கு தனியாக போகாதீர்கள்! முதலமைச்சர் விஜய்க்கு பொன் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!