97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்
இத்தனை லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்றால் இவ்வளவு காலம் எப்படி தேர்தல் நடத்தினீர்கள்? என்று காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் எனத் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் இந்த அவசரக்கதி நடவடிக்கையைக் ‘கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சசிகாந்த் செந்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "திருவள்ளூர் தொகுதியில் மட்டும் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இத்தனை லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்று நீக்கப்பட்டிருந்தால், கடந்த காலங்களில் இவர்களை வைத்துக்கொண்டு எப்படித் தேர்தல்களை நடத்தினீர்கள்? ஒவ்வொரு ஆண்டும் திருத்தப் பணிகள் நடந்த பிறகுதானே தேர்தல் நடத்தப்படுகிறது? அப்படியிருக்கையில் திடீரென இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்களை நீக்குவது எவ்விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார். குறிப்பாக, ஏழை எளிய மக்கள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரின் வாக்குகளே அதிக அளவில் நீக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அவர் சந்தேகம் எழுப்பினார்.
"தகவல் சென்றடையாத மக்கள், வேலை நிமித்தமாக வெளியே சென்றவர்கள் எனப் பலரையும் 'முகவரியில் இல்லை' என்று கூறி நீக்கியிருப்பது ஜனநாயகப் படுகொலை. ஒரு மாத காலத்திற்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நீக்கங்களைச் சரிபார்ப்பது சாத்தியமற்றது. இது ஒரு அவசரக்கால நெருக்கடி போன்ற சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, இந்த SIR முறையை உடனடியாகத் திரும்பப் பெற்று, பழைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் என்றும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் ‘டிமாண்ட்’ வைத்தார்.
இதையும் படிங்க: ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!
இதையும் படிங்க: "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!